Friday 30 January 2015

நிலவே ....

விண் மீனுக்கு அரசியாய்
வீற்று நீ இருந்தால்
மண்ணில் உள்ள
மாற்றத்தை உன்
மனம் தான் உணருமோ ?

அங்கிருந்து பார்த்திட்டால்
வளம் கொஞ்சும் வண்ண காடும்
வழிந்தோடும் நதி நீரும்
பரந்திருக்கும் பார் நிலமும்
திரை கொண்ட கடல் எழிலும்
திகட்டாமல் ரசிக்க தோன்றும் ...

வானகத்தில் வசந்தமாய்
வசித்தது போதும் ..
வையகம் ஒரு நாள் ..
வந்து தான் பாரேன் ......

கூறு பட்ட நிலத்தின்
மாறு பட்ட நிலைமையின்
வேறு பாட்டை உணர்ந்திடுவாய் ...

தண்ணீருக்கு அங்கங்கே
தடை உண்டு அறிந்திடுவாய் ...

திரை கடல் சென்றோரில் ..
திரும்பிடார் எண்ணிக்கை
தினம் தினம் அறிந்திடுவாய் ....

பால் முதல் பலவற்றில்
படர்ந்திட்ட கலப்படத்தின்
பயன் கூட தெரிந்திடுவாய் ...

காற்றின் மாசு -வாழும்
காலத்தை குறைக்கும்
கஷ்டத்தை நீ உணர்வாய் ....

மொழியோடு நிறமும்
இறையோடு இனமும்
வேறுபட்ட பூமியின் ..
வேஷம் அதை அறிவாய் ...

அன்பும் அகிம்சையும் -இங்கே
விலை பேசி விற்கப்படும்
நிலை கண்டு தவிப்பாய் ....

அநியாயம் இப் புவியில்
நியாயமாய் போனதை கண்டு
நீயும் வியப்பாய்....

வான் நிலவே ...
வா நிலவே ...
வையகம் வாழ்
நிலையை பார் நிலவே ....

தேய்ந்த பின்னும்
வளர்வாய் நீ ....

தேய்வதே வளர்ச்சி- எனும்
எங்கள் நிலை
என்ன சொல்ல ....?

1 comment:

  1. அநியாயம் இப் புவியில்
    நியாயமாய் போனதை கண்டு
    நீயும் வியப்பாய்....

    வியப்பதற்கு ஏதுமில்லை . நீயும் வானில் நீந்தாமல் சாவாய் என்ற நிலை பொருந்துமா

    ReplyDelete