Friday 27 November 2015

வீழ்ச்சி ....

ஆயிரம் முறை
 மீட்கப்பட்ட பின்னும்
இன்னும் தவறி விழுந்து கொண்டுதான்
இருக்கிறேன் ....
உன் இதயம் என்னும்
பள்ளத்தில் ...

Saturday 7 November 2015

உன் தனையனாய் (என் தந்தை பற்றி ...)

எந்தன் வழிகாட்டியாய்
எந்தன் வாழ்வை
வசந்தமாக்கிய வாசமாய்
வந்தவன் நீயே ...

உன் கை தட்டலில்
தவழ்ந்து வந்து
உன் கால் பிடித்து எழுந்து
உன் சுண்டு விரல் பிடித்து
நடை பழகிய
என் கால்களும்...

உன் வயிறு சிம்மாசனம் ஏறி
மார்பின் முடி பிடுங்கி
முகம் முதல் முழுவதும்
நக கீறல் இட்ட
என் கரங்களும்

தவறிய மொழிகள் எல்லாம்
தத்தை மொழி என்று
ரசித்திட்ட உன் அன்பால்
தலைகனம் பிடித்த
என் வார்த்தைகளும்

தந்தையே ...
உன்னையே உலகாய்
எண்ணிக்கொண்டு இருக்கின்றன ..

என் தலை வகிடு முதல்
தாழ் பணியும் குணம் வரை
உன்னை பார்த்து
என்னில் உருவாகியவை தான்...

உன்  தோள் மீது
துள்ளி விளையாடிய
நினைவும் ...

கால் மீது
தொட்டில் ஆடிய
உறவும்
உனக்கு பதிலீடின்றி
பட்டினி கிடக்கின்றன ....

நீயே என் முழு உரு
நீதான் என் முதல் குரு ,...

உன் கோபங்களூடே
என்னை குணமுள்ளவனாக்கியது
உன் அன்பு ...

உன் அர்ச்சனை யை
என் அழகிய வாழ்வின்
ஆபர்ணமாய் சூடிக்கொண்டேன்

வேதனை கள் உன்னை
என்னில் இருந்து
வேறு படுத்திய போதும்

என்னை உலகத்தின் பார்வையில்
வேறு படுத்தியவன் நீ ....

தந்தையே
தவறும் காலங்கள்
என்னை தறுதலையாய்
செய்தாலும் ...

உன் தனையனாய்
உன் அன்பின் அணைப்போடு
தவறாமல் இருப்பேன் ...

Saturday 24 October 2015

இனிப்பான பெயர்

கடற் கரை மணலில்
உன் பெயரை எழுதினேன்
அலை அடித்து சென்றதும்
நீரெல்லாம் இனிப்பாய் மாறியதே  ...?

பழிக்குப்பழி

    பழிக்குப்பழி 


ஒரு மரணத்திற்கு
பழிக்குப்பழி  யாக
இத்தனை கொலை களா?
மரண ஊர்வலத்தில் மலர்கள்....

Wednesday 30 September 2015

பண்பட்ட பண்பாடு

கற்காலம் முதல் 
கணிபொறி காலம்வரை 
மனித பண்பு வளர்ந்தது 
நொடிக்கொரு  வளர்ச்சியாய்...

பண்பாடோ போனது 
பாழ் பட்ட இருளினில் 

எண்ணிடா அறிவுடையோர் 
எம் நாட்டில் இருந்தாலும் 
பண்பிலா பல பெரும் 
பார்க்கின்றோம் பல இடத்தில்.

நெறியோடு அறிவிலும் 
நாம் அடைந்த வெற்றிக்கெல்லாம் 
நம் உணர்வோடும் ஒன்றிட்ட 
பண்பாடே காரணம் ..

பெண்ணின் பெருமையை 
பேணி நாம் காத்தது தான் 
நம் பெண் இன்று 
விண் செல்ல விதையாய் நின்றது ...

கண்ணென நாம் காத்த
பண்பாட்டு  நெறி இன்று 
பல நாட்டின் கண் நம் மேல் 
படும் நிலையை செய்தது 

பல புகழ் தந்த 
பண்பாட்டை பேணிடுவோம் 
பண்போடும் அன்போடும் 
பல ஆண்டு புகழ் பெறுவோம் 

Friday 31 July 2015

டாக்டர் . அப்துல்கலாம் இரங்கற்பா

டாக்டர் . அப்துல்கலாம் இரங்கற்பா

அக்னிச் சிறகுகள் தந்த அருமை தலைவா ....
கனவு காணச் சொன்ன கருணை தலைவா...
மண்ணகம் இருந்த உன்னை 
விண்ணகம் அழைத்து ச் சென்ற
வீரன் தான் மரணமோ ?
கவலையோடு எமை விட்டு - ஏவு
கணையாகப் பறந்தீரே....
நீர் நிரம்பிய கண்கள் தோன்றுது
திரும்பிய பக்கமெல்லாம் ..
"நீர் " இறந்திட்ட சோகத்தில் ....
பிரிந்தீரே எமை விட்டு
வருந்துகிறோம் கண்ணீர் விட்டு ....
பல பிறப்பு பிறந்தாலும்
பாரதத்தில் தான் பிறக்க
வரம் வேண்டி வணங்குகிறோம்....

Saturday 21 March 2015

வாலி இரங்கற்பா

ஜூலை 18 2013 அன்று வாலி இறந்த போது முகநூலில் நான் பதிவு செய்த
இரங்கற்பா 


வயது முதிர்ந்த
வாலிபம் ஒன்று
வானில் இன்று....

கவிய நாயகனே
காவியமாய் நீ இன்று ....

மரணம் உன்னை தீண்டியதால்..
கவிதை உலகுக்கு எதிரி இன்று...

கவிதை கூட கலங்கியது ...
கவிதை கடலாம் உன் பிரிவால்...

தமிழ் எழுத்து தயங்கியது..
நீ இல்லா கவியாய் மாற ...

புன்னகை கூட
அழும் விந்தை
உன் மரணம் காட்டியது ....

பூக்கள் கூட
தன் நிறத்தை
கருப்பாய் இன்று மாற்றியது...

எமன் உன்
கவி கேட்க
எம்மிடம் இருந்து
உன்னை பிரித்தான் ....

வாலி பமாய் கவி வடித்தாய் ..
வாழ்க்கை எல்லாம் இடம் பிடித்தாய் ...

எமை வாட்டிடவோ
இன்று பிரிந்தாய் ....

இதயம் ஒன்று
இல்லாத உடல் போல்....
நீ இல்லா
தமிழ்(நாடு ) இன்று
வேல் பாய்ந்த புண் போலே
புலம்பும் நிலை
என் சொல்ல ........

உன் தமிழ் இன்றி தவிக்கும் ..

இரண்டும் நீயானாய்

நினைவு......
கனவு.....
இரண்டும் எனக்கு ஒன்று தான்.....
இரண்டிலும் நீதானே
வாசம் செய்கிறாய்....
என்னவளே.........
.....

நளின நடனம் .....

ஒவ்வொரு வார்த்தை
பேசும்போது
உன் உதடு
நடத்தும் நடனங்களுக்கு ......
ஒருகோடி பேர்
சேர்ந்து நடத்தும்
பரத நாட்டியம்
கூட ஈடில்லை
அன்பே .............

Saturday 7 March 2015

நண்பனோடு நகர்ந்த நேரம் .....

நாட்காட்டியில் முடிந்து போன 
பல மாதங்கள்..
நாள்தோறும் கடந்து போன 
பலவித மனிதர்கள் 
பலவித சோகங்கள் 
சில சில சந்தோசங்கள் ..
பலவித மாற்றங்களுக்கூடே
நம் மற்றுமொரு  புதிய சந்திப்பு .....

தொலைபேசி உரையாடல் இல்லை 
முகநூல் போன்ற புதிய தோழில் நுட்பம் வழியாய் 
நம் நட்பு உறவாட வில்லை .....

நம்முடன் நம் நட்பு மட்டுமே 
உறவு பாலமாய் உறைந்து இருக்கிறது ....

இருவரின் கண்களும் 
பகிர்ந்து கொண்ட 
வார்தைகள் போதும் 
உதட்டால் நலம் விசாரிக்க 
ஒன்றும் இல்லை ...

பகிர்ந்து  கொள்ள 
பல விஷயங்கள் உண்டு 
அனால் ....
நம் மனம் சந்தித்த 
மகிழ்ச்சி மழையில்
அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டன .....

மனம் முழுவதும் 
மகிழ்ச்சி மட்டுமே 

எதிர்காலம் கடத்தகாலம் 
ஏன் நிகழ்காலம் கூட 
மறந்து தான் போனது 

கரங்கள் ஒன்று சேராமல் 
நம் மனங்கள் கைகோர்த்த படி 
நடை பயின்று கொண்டிருக்கிறோம் ....

நடக்கும் கால்களை போலவே 
நமக்கும் இலக்கு தெரியவில்லை ..

பாதை பணத்திற்கு முடிவு உண்டு 
நம் எண்ணத்தில் பயணித்து 
வார்த்தைகளில் முடியும் 
உரையாடல் களுக்கு முடிவு இல்லை....

அர்த்தமற்ற பல உரையாடல்களுக்கு 
நம் நட்பாம் சுவடியில் 
பல கோடி அர்த்தம் உள்ளது ..

ஏதேதோ பெசிக்கொண்டிருகிறோம் 

நகரும் நேரதிற்கும்
நம் இருவரையும் 
எதிர் பார்த்து காத்திருக்கும் 
நம் உறவுகளுக்கும் மட்டுமே 
தெரியும் நாம்
பேசிகொண்டிருக்கும் மணி நேரங்கள் ....

அடிக்கடி அழைக்கும் 
மனைவியின்  கைபேசி மணியோசை 
எங்களுக்காய் இன்னொரு உறவு 
காத்திருகிறது  என்பதை உணர்த்துகிறது ....

பேசிய ஒன்றும் நினைவில் இல்லை 
நினைவில் ஒன்றே ஒன்று தான் 
ஆம் அது மகிழ்ச்சிமட்டுமே  .....

நெடு நேரமாய் 
கடந்து போன நேரம் இப்பொழுது 
எங்களுக்கு  நினைவு படுத்துகிறது 

வீட்டில் சிரித்து கொண்டிருக்கும் 
குழந்தைகளுக்கும் 
காத்திருக்கும் மனைவிக்கும் 
இனி எங்கள் உறவு வேண்டும் என்று ...

பிரிந்து போகிறோம் 
எங்கள் உறவுகளோடு 
உறவாட ......

எங்கள் நட்பு ...
நீங்காமல் நங்கூரம் இட்டு 
மனமொடு 
மறுபடியும் ஓரமாய் ஒட்டி கொண்டது ....

மீண்டும் சந்திப்போம் நண்பனே ...
வரும் காலம் 
கண்டிப்பாய் வழங்கும் 
இன்று போல் ஒரு 
வசந்தநாளை ...... 

Thursday 26 February 2015

நாகரீக நாணம் .

ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்தாலும் எங்களுக்குளும் நாணம் இருக்கிறது.....தலை குனிந்து நடப்பதற்கு பதில் தலையில் துணியை சுற்றியபடி நடக்கிறோம் ....இது நாகரீக நாணம் .....


Friday 20 February 2015

சுடும் காதலி ....

நீ தான் என் வாழ்வின் ஆதாரம்..
சில நாட்களில் இன்பமாய் எனக்கு நீ...
சில நாட்களில் துன்பத்தின் சுவடாய் நீ..
நடுங்கும் குளிரின் நாட்களில்
உன்னை தேடி என் மனது...
என்னோடு நெருக்கமாய் இருக்கும்
நேரங்களில் குளிரை அணைக்க துடிக்கிறது,,,
உனக்காகவே என் வேர்வை துளிகள் ...
என் உணவை உருவாக்கி ...
உயிரை வளர்த்தவள் நீ ...
என் வாழ்வின் ..
முதல் பாகம் முதல்
முடியும் தருணம் வரை
என்னுடனே இருக்கும்
வெயில் என்னும் காதலி ....
நீ சுட்டால் கூட சுகம் தான் எனக்கு.......

நல் நட்போடு வாழ்ந்து பார் .....

நல் நட்போடு வாழ்ந்து பார் .....
தொடும் தூரத்தில் சூரியன் தெரியும் ....
விரல்கள் ஸ்பரிசத்தை நாடாமல்..
உழைப்பை விரும்பி செய்யும் ....   
உறவுகள் உனக்கு 
உண்மையான அன்பை வழங்குவதை நீ உணர்வாய் ...
தோல்விகள் உனக்கு 
துணையாய் வந்து வெற்றிகளின்
படியில் உன்னை வழி நடத்தும்..
ரோஜாக்கள் கூட கனி ஆகாதா?
என்ற கனிவு நெஞ்சுக்கு சொந்தகாரன் ஆவாய்..
நல் நட்போடு வாழ்ந்து பார் ..
நாளைய உலகும் 
நாளைய வாழ்வும் 
நமக்கு தான் .....

நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

நாங்கள் நரகத்தை
நகரத்தில் அனுபவிக்கும்
நாகரீக ஆவிகள் ....
இறப்பை தள்ளிப்போட
இரப்பை தேடிய
இழிநிலை ஜென்மங்கள் ....
பிறரின் புண்ணியத்தில்
பசியாற்றும் பாவ பதர்கள் ......
கை தூக்கி விட ஆள் இன்றி
கையேந்தும் நிலை பெற்றோர் ...
பசிக்கு பசியாற்ற
பச்சை தண்ணீர் கொடுபவர்கள் ...
மானம் எனும் மரியாதையை
தானம் கேட்டதால் இழந்தவர்கள் ...
கால் தழுவிய பாதையில்
உடல் தழுவி உறங்குபவர்கள் ...
நாங்கள் நகரத்து பிச்சைகாரர்கள் ...

மதுவே மகிழ்ச்சி .....

அன்பினை வழங்கும் நல்ல
அழகிய குடும்பம் வேண்டாம் ....
பிஞ்சி கை நீட்டி வரும்
பிள்ளையின் பாசம் வேண்டாம்....
காலை கதிரின் ஒளி..
கண்களால் ரசிக்க வேண்டாம் ...
மாலையின் எழிலின்
மகிழ்ச்சியும் எனக்கு வேண்டாம்..
நிலவினை ரசிக்க வேண்டாம் ..நல
உணவினை ருசிக்க வேண்டாம் ....
பூவினை பார்த்து பார்த்து
பூரிப்பும் அடைய வேண்டாம் .....
மதியை கெடுக்கும் நல்ல
மதுவின் போதை போதும்...
நாற்றம் "மது " இருந்தாலும்
நான் மகிழ "மது" போதும் ...
சாக்கடை ஓரம் வீழ்ந்திடினும்
சகலமுமாய் எனக்கு மது போதும் ...
உறவெல்லாம் தூற்றிடினும்
உற்ற குடி எனக்கு போதும் ...
என் குடியே அழிந்தாலும்
மது குடித்தே நான் மாளவேண்டும் ....

Thursday 19 February 2015

ஏழ்மை தமிழ்

என் தமிழின் 
ஏழ்மை நிலை
என்ன வென்று நானுரைப்பேன் .....
கண் என் தமிழ் என்று 
கவி உரைத்த நாட்கள் எல்லாம் 
காணாமல் போனதன் 
காரணம் என்ன சொல்ல ....
தமிழ் பண்ணில் கூட 
தமிழின் தரம் 
தாழ்தின்று போனதேன் .....
தமிழர் 
மூச்சி விடும் ஒலி 
மாற்று மொழியாய் 
போனதன் காரணம் நானறியேன் ...
பிறப்பு முதல் இறப்பு வரை 
பிறமொழியை தமிழ் என்று 
தமிழரே பேசும் நிலை என்னுரைப்பேன் .....
தரணி போற்றும் பெருமை கொண்ட 
தமிழ் என்னும் தங்க மொழி.....
தரமது தாழ்த்து இன்று 
தத்து மொழி ஆகியதால் அகம் நொந்தேன்....
தமிழ் அறிந்தோரும் 
தமிழை பேச 
தயங்கும் நிலை கண்டு ...
தனியே நின்று ததும்பு கின்றேன்..
ஒண்ட வந்த மற்ற மொழி 
ஓங்கி வளர்ந்த நம் மொழியை 
ஒடுக்கி ஆளும் நிலை கண்டு 
ஓரம் நின்று புலம்பு கின்றேன்....
நான் பிறந்த நாள் தொட்டு 
நான் பேசும் தமிழ் மொழி 
நல்ல பழந்தமிழ் 
இல்லை என்று உணரும் பொது - என் 
நாடி எல்லாம் நடுங்கு கின்றேன் ....
என் தமிழை கெடுத்ததிலே 
எனக்கும் பங்கும் உள்ளதை 
எண்ணி எண்ணி வாடுகின்றேன் .....

Friday 6 February 2015

விளையாட்டு ....

விளையாடச் சென்றது 
குழந்தை ...
கையில் 
கைப்பேசியோடு ....

வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ..

விதிமுறை மதிக்காத 
வீணரிடம் இருந்து
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

சதி செய்யும் கூட்டத்தின் 
விதியில் இருந்து விலகிட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

புகழுக்காக புது கூட்டம் கூட்டும் 
புண்ணியரிடமிருந்து புலம்பெயர 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

இருமாப்பில் இயங்கும் 
இருட்டு மனிதரிடம் இருந்து 
வெளிச்சத்திற்கு வந்திட 
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

பிரிவினை வேண்டியே 
பிற வினை செய்திடும் 
கெடு வினை மாந்தரை 
புறத்தினில் தள்ளவே..
வேண்டும் இன்னுமொரு சுதந்திரம் ...

போரும் குழப்பமும் 
தீதும் கொடுமையும் 
தீ இட்டு கொளுத்திட்டு 

சாந்தமும் அமைதியும் 
சமமாய் நிலவிட 
சத்தியமாய் வேண்டும்...
 இன்னுமொரு சுதந்திரம் ...

Thursday 5 February 2015

இல்லாள் .....

அன்பு அகம் கொண்டாள்..
அரவணைக்கும் மனம் கொண்டாள் ..

பால் மிஞ்சும் நிறம் என்னும் 
பாசத்தை பகிர்ந்து கொண்டாள் ...

கொழுநன் மனமொத்த 
வழுவிலா குணம் கொண்டாள் ..

உறவோடு உறவாடும் 
உன்னத நெறிகொண்டாள்...

முகை கொண்ட இதழோடு
மதி ஒத்த முகம் கொண்டாள் ..

தன்னோடு தன் வீடும் -தான் 
சிறந்தது என்னும் 
தற்பெருமை தான்  இல்லாள் ... 

வஞ்சமது தான் தங்கும்
நெஞ்சமது  இல்லாள் ..

பஞ்சமது வீட்டில் என்று 
பகலும் நிலை கொள்ளாள் ...

இன்பம் தங்கும் 
இனிமை பொங்கும் 
இல்லம் ஆளும் 
இல்லாள் .....

ஊனமானவன் ....

கரம் ....
கண் ...
மூளை ....
கால் ...
இதயம் ....
எல்லாம் இருந்தும் 
ஊனமானவன் தான் ...
" தந்தை" இன்றி 
இத் தரணியில் வாழ்பவன் .....

Wednesday 4 February 2015

நில் என்ற சொல் ...

அன்பே ....
உலகத்தின் இயக்கத்தை 
நிறுத்த 
உன் உதடு உச்சரிக்கும் 
"நில்"
என்ற ஒரு சொல் போதும் ....

Sunday 1 February 2015

அம்மா ....

வார்த்தைகள்  கோர்த்து 
வர்ணனை செய்ய முடியாத 
வானுயர்ந்த படைப்பவள்....

வளம் கொஞ்சும் 
வாசனை மலர் தோட்டம் ..
வரிசையாய் நின்றாலும் 
ஈடு செய்யா
எழில் அவள் .....

பாசமோடு நேசத்தையும் 
நட்போடு உறவைவும் 
பற்று கொண்டு இணைத்தாலும்..
பதிலீடற்ற பாலவள்.

எண்கள் முடிவினும் 
எண்ணி முடித்திடா..
எல்லை இன்றி விரிந்தவள் ...

காலமெல்லாம்,..
நம்முடனே ..
கடவுளாய் வாழ்ந்திடும் 
நம் நலம் நாடும் 
அன்னையவள் .......

விலகல் ....

அன்பே ....
விலகிப்போவதாய் இருந்தால் கூட ...
இருளாய் தான் விலகிப்போவேன் ..
உன் வாழ்வில் 
வெளிச்சத்தை கொண்டுவர ...

Saturday 31 January 2015

புன்னகை ......

வெற்றி பெற்றோர்கள் 
படைக்கும் உடனடி 
கவிதை ....
புன்னகை ......

கண்ணீருக்கு கவலை இல்லை ...............

மாசு நிறைந்த இம்
மானுட தேசத்தில்
கலங்கிய கண்களுக்கும் 
களங்கமில்லா மனங்களுக்கும் தான் கவலை ......

உடைந்த பல இதயங்கள்
எழுதிய இரங்கற்பாக்கள் ....
கண்ணீர் துளிகளின்
கடைசி சங்கமத்தில்
பல நூறு பார்கடல்கள் ......
அங்கே ....
நூறு பரந்தாமன்கள்....
பள்ளி கொண்ட படி ....
விண்ணை முட்டும் அளவு
வேதனைகள்....
ஒரு பரந்தாமன் கூட
விஸ்வரூபம் எடுத்து
வேதனையை விரட்ட வில்லை ....
கண்கள் அளக்கும்
அனைத்தும் இதயத்தை
காய படுத்தினால்
கடல் அளவு
கண்ணீர் என்பது
நம் கற்பனையில்
கொஞ்சம் தான் ......
பசி , பிணி யால் வரும்
உயிர்வதைக்கும்
கண்ணீரின் அளவு ....
உறவுகளால் வரும்
உள் காயத்தால் வரும்
கண்ணீரில் பலமடங்கு குறைவு ....
வேதனை களை சுமந்தும்
இறுகிய இதயதில்
இருந்து உருகியும்
சதை களை வருடிய படி
சல்லாப உல்லாசமாய்...
ஓடி விளையாடும்
கண்ணீருக்கு என்ன கவலை .....
காயப்பட்டு ....
கனத்து போய்
கவலை கொள்ளும் ...
மனதிற்கு மட்டும் தான் கவலை ..........

இது தான் உண்மை காதலோ ....?

நதிக்கரை மணலில்
நீயும் நானும் .....
நீ...
கரை மணலை ஏடாக்கி 
காலால் கவிதை வரைந்து கொண்டிருக்கிறாய் .....
நான்....
கவிதையை கண்முன்னே
கண்டு கொண்டு
கற்பனையில் கம்பனாகிறேன் .....
நம் இருவர்
உள்ளத்து உள்ளுவதும்
காவியம் பல கண்டு ..
கவி பல வென்று ...
ஆதாம் தொடங்கி
அழியாமல் நிற்கும் ..
காதல் தான்.....
உன் தாய் தந்த
நாணத்தால் தயங்கும்
உன் உதடுகளுக்கு .....
உதவிட மறுக்கும்
உன் முகத்தை
பார்த்த
தரை மணல் ...
தவழ்ந்து வரும்
தத்தை யாம்
தண்ணிய நீரில்
தானாக கரைந்தது .....
என் மூச்சில் வரும்
காற்று கூட
உன் முகத்தை
பார்க்கும் ஆவலில்
உன் முன்னே நிற்கிறது ....
மௌனங்கள் மட்டும்
மௌனமாய் பெசிக்கொண்டிருகிறது .....
நொடிகள் நிமிடமாகி
நிமிடம் மணியாகி
நிசப்தம் மட்டும் நிஜமாகிறது .....
நிற்பது இருவரும்
நம் மனம்
நதி தாண்டி
வனம் தாண்டி
கடலை கடந்து
காதல் சொல்கிறது .....
உதடு உணர்த்தாத
நம் உன்னத காதலை ....
உம் ....
என்ற உச்சரிப்போடு
திரும்பி செல்லும் போது..
நம் உள்ளம் உணர்த்துகிறது ........
நம் கால்கள்
கடந்து செல்லும் போது ..
கண்ணீர் வழியே
நம் காதல்
நம்மோடு ஒட்டிகொண்டது ....
ஓ....
இது தான் உண்மை காதலோ ....?

மழை.....

மேகத்தோடு மெலிய
காதல் கொண்ட
கடல் நீரில் 
காரெனும் கருவாகி ....
வளர் மலை முட்டி
குளிர் வளி தீண்டி ...
கோடை விலக்க..
குவலயத்தில் குதித்தாய்
வாடை
கொஞ்சும் மழையாக.....

நீயே ....

கதிரவன் ஒளியும் நீயே ...
கார்முகில் மழையும் நீயே ...
பொன்வண்ண நிலவும் நீயே ..
பொங்கிடும் நதியும் நீயே ...

வண்ணத்தின் அழகும் நீயே
வானத்தின் வனப்பும் நீயே ...
தழுவிடும் தென்றல் நீயே ..
தணித்திடும் குளிரும் நீயே ...
சோலையின் செழுமை நீயே ..
காலையின் இனிமை நீயே ..
தருவின் நிழலும் நீயே...
தங்கத்தின் ஜொலிப்பும் நீயே ....
காதலின் தவிப்பும் நீயே ..
கருணையின் உருவும் நீயே ..
இதயத்தில் துடிப்பும் நீயே ..
உதிரத்தின் ஓட்டம் நீயே ..
காதலாய் கலந்தாய் நீயே
ஆதலால் என் மொத்தம் நினதே .......

பசலை நோய் ....

மை பூச விழி ரெண்டும்
மறுத்து நிற்குது ..
நடனமாடும் நற் கூந்தல்
நாட்டம் மறுக்குது ....
கண் துஞ்ச மறுக்குது -இரு
கால் நடக்க மறக்குது ....
மலர் மணம் வெறுக்குது ..
மனம் தினம் தினம் நோகுது ...
பசி யது விலகுது -நல்ல
ருசியது மறக்குது
இடை வருடும் மேகலை -தன்
இடம் விட்டு நகருது ....
மது ஊறும் இதழ் அமுதம்
கொடும் நஞ்சாய் மாறி போனது...
பசலை யாம்
நோய் என்னை....
பாடாய் யன்றோ படுத்துது .....

மரித்துப்போன மனிதநேயம் ...

கொட்டும் மழையில்
குடை பிடித்தபடி நான் நடக்க ....
குளிரில் நடுங்கியபடி
குத்து செடியோரம்
குத்தவைத்து இருக்கும் 
கூன் விழுந்த மூதாட்டியை பார்த்து ..
"பாவம்" என்று
பாசாங்கு வார்த்தை
பகன்று விட்டு ....
பத்து நொடிகள்
பாசப்பார்வை பார்த்துவிட்டு ....
பணிச்சுமை என்று
பரிதாபம் மட்டும் காட்டும்....
என்னிடமும் ....
மனித நேயம் மரித்து தான் போய்விட்டது .......

Friday 30 January 2015

நிலவே ....

விண் மீனுக்கு அரசியாய்
வீற்று நீ இருந்தால்
மண்ணில் உள்ள
மாற்றத்தை உன்
மனம் தான் உணருமோ ?

அங்கிருந்து பார்த்திட்டால்
வளம் கொஞ்சும் வண்ண காடும்
வழிந்தோடும் நதி நீரும்
பரந்திருக்கும் பார் நிலமும்
திரை கொண்ட கடல் எழிலும்
திகட்டாமல் ரசிக்க தோன்றும் ...

வானகத்தில் வசந்தமாய்
வசித்தது போதும் ..
வையகம் ஒரு நாள் ..
வந்து தான் பாரேன் ......

கூறு பட்ட நிலத்தின்
மாறு பட்ட நிலைமையின்
வேறு பாட்டை உணர்ந்திடுவாய் ...

தண்ணீருக்கு அங்கங்கே
தடை உண்டு அறிந்திடுவாய் ...

திரை கடல் சென்றோரில் ..
திரும்பிடார் எண்ணிக்கை
தினம் தினம் அறிந்திடுவாய் ....

பால் முதல் பலவற்றில்
படர்ந்திட்ட கலப்படத்தின்
பயன் கூட தெரிந்திடுவாய் ...

காற்றின் மாசு -வாழும்
காலத்தை குறைக்கும்
கஷ்டத்தை நீ உணர்வாய் ....

மொழியோடு நிறமும்
இறையோடு இனமும்
வேறுபட்ட பூமியின் ..
வேஷம் அதை அறிவாய் ...

அன்பும் அகிம்சையும் -இங்கே
விலை பேசி விற்கப்படும்
நிலை கண்டு தவிப்பாய் ....

அநியாயம் இப் புவியில்
நியாயமாய் போனதை கண்டு
நீயும் வியப்பாய்....

வான் நிலவே ...
வா நிலவே ...
வையகம் வாழ்
நிலையை பார் நிலவே ....

தேய்ந்த பின்னும்
வளர்வாய் நீ ....

தேய்வதே வளர்ச்சி- எனும்
எங்கள் நிலை
என்ன சொல்ல ....?